குன்னூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசம்: வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குன்னூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-30 22:30 GMT
குன்னூர்,

மஞ்சூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 5 காட்டுயானைகள் வெளியேறி குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம், கோடேரி, அரையட்டி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தன. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரேக்மோர் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானைகள், அங்குள்ள ரே‌‌ஷன் மற்றும் மளிகைக்கடையை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மூப்பர்காடு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் காட்டுயானைகளை விரட்டியடித்தனர். ஆனால் வனப்பகுதிக்கு சென்ற காட்டுயானைகள் மீண்டும் கிளிஞ்சடா, மேல் பாரத் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வாழை, மேரக்காய் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் ந‌‌ஷ்டம் அடைந்தனர். இதையடுத்து காட்டுயானைகளை விரட்ட வருமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் வாகனங்களில் எரிபொருள் இல்லை, காட்டுயானைகளை விரட்ட பட்டாசு இல்லை என்று அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 6 மணிக்கு கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வனத்துறையினரை கண்டித்து சேலாஸ்-கொலக்கம்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தாசில்தார் குப்புராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் வனத்துறையின் மற்றொரு குழுவினர் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த தகவலை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர் அந்த வழியே போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்