டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை தேவை கே.எஸ்.அழகிரி பேட்டி

‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணை தேவை’, என கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2020-01-30 22:30 GMT
சென்னை,

மகாத்மா காந்தியின் 73-வது நினைவுநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்திபவனில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் எஸ்.சி. பிரிவு தலைவர் கு.செல்வபெருந்தகை, மாவட்ட தலைவர்கள் வீரபாண்டியன், சிவராஜசேகரன், மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, ஆர்.டி.ஐ. பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமானோர் காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் கொள்கையை உடைக்கும் நோக்கில், சாதி-மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. எனவே மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும். பா.ஜ.க. அரசுக்கு தக்க பதிலடி தரவேண்டும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்திருக்கும் முறைகேடு வெட்கக்கேடு ஆகும். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை. மாநில அரசு விசாரணை நடத்தக்கூடாது.

‘பாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும்’, என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அரசின் மிக உயரிய பதவியில் இருப்பவர் இப்படி வரம்பு மீறி பேசக்கூடாது. ராஜதந்திர ரீதியில் தவறான இந்த பேச்சு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவிடும். அதற்காக பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் ஆதரவாக பேசுவதாக கருதக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற இருந்த காந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நிர்வாகிகள் யாரும் வராததால் 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

மேலும் செய்திகள்