உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

திருவொற்றியூரில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2020-01-30 22:00 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் அம்சா தோட்டம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சூரியபாபு. முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். நேற்று முன்தினம் இரவு இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென்று அவரது வீட்டில் இருந்த டி.வி., ஏ.சி. போன்ற மின்சாதன பொருட் கள் வெடித்து சிதறின. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதேபோல் பக்கத்தில் உள்ள சில வீடுகளிலும் அடுத்தடுத்து மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது. இதனால் அவர்களும் வெளியே ஓடிவந்தனர். இந்த சம்பவத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட பழுது காரணமாக உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “இந்த பகுதியில் அடிக்கடி உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு மின்சாதன பொருட்கள் பழுது ஆகிறது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் சேதமாகி உள்ளது” என்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்