நகைக்கடை உரிமையாளரிடம் குறைந்த விலைக்கு தங்ககட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது ரூ.28 லட்சம், 2 கார்கள் பறிமுதல்

நகைக்கடை உரிமையாளரிடம் குறைந்த விலைக்கு தங்ககட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.28 லட்சம் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-01-30 22:30 GMT
சென்னை,

சென்னை அமைந்தகரை வடக்கு கஸ்ரத் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(வயது 54). இவர், செனாய்நகரில் நகைக்கடை வைத்துள்ளார். இவரிடம் குறைந்த விலைக்கு தங்ககட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சத்தை 7 பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் ‘அபேஸ்’ செய்தது. இந்த மோசடி சம்பவம் கடந்த 23-ந்தேதி நடந்தது.

இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பிரவீன்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் மந்தைவெளி கற்பகம் அவென்யூ சிரியன் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த முகமது சபீர் அலி(64), அவருடைய மகன்கள் அயாஸ் அலி(32), வசீம்அலி(31), அண்ணாநகர் கணபதி காலனி ஓ.பிளாக்கைச் சேர்ந்த யூசுப்கமால் (35) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.28 லட்சம் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்