அ.தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏ.க்களே பேசும் போது “என்னுடன் பழகியவர்கள் என்னிடம் பேசுவதை தவிர்க்கின்றனர்” - திருமண விழாவில் மு.க.அழகிரி பேச்சு

“என்னுடன் பழகியவர்கள் என்னிடம் பேசுவதை தவிர்க்கின்றனர்” என மதுரையில் நடந்த திருமண விழாவில் மு.க.அழகிரி பேசினார்.

Update: 2020-01-30 22:30 GMT
மதுரை, 

மதுரை வக்கீல்கள் சங்க செயலாளர் மோகன்குமார் இல்ல திருமண விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று காலை நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவருடைய மனைவி காந்தி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் கயல்விழி- ஜெகதீஷ் குமார் ஆகியோரை வாழ்த்தி, திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த விழாவில் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, விழா மேடையில் தனது 69-வது பிறந்த நாளையொட்டி மு.க.அழகிரி கேக் வெட்டினார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மதுரை சிறையில் இருந்தபோது, வக்கீல் மோகன்குமார்தான் அவருக்கு உதவினார். அதனை அவர் மறந்திருக்கமாட்டார் என்பது எனக்கு தெரியும். மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம் தான்.

அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.பி.க்களே எனக்கு வணக்கம் செலுத்தி பேசுகின்றனர். ஆனால் என்னுடன் பழகியவர்கள் என்னை சந்தித்து பேசுவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலைமை எல்லாம் எப்போது மாறப்போகிறது என்பது தெரியவில்லை. மாறவில்லை என்றால் அவ்வளவுதான்.

என்னை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். நானும் கலைஞரின் மகன் தான். நான் நினைத்ததை சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் மு.க.அழகிரி கூறும்போது, “தமிழ்நாடு இருக்க வேண்டுமானால் நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்