தாரமங்கலம் ஒன்றிய தலைவர் பதவியை பா.ம.க. கைப்பற்றியது - துணைத்தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைப்பு

தாரமங்கலம் ஒன்றிய தலைவர் பதவியை பா.ம.க. கைப்பற்றியது. மேலும் துணைத்தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2020-01-30 22:30 GMT
தாரமங்கலம், 

தாரமங்கலம் ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.-4, தி.மு.க.-4, அ.தி.மு.க.-2, தே.மு.தி.க.-1, சுயேச்சைகள்-2 இடங்களை கைப்பற்றின. இதைத்தொடர்ந்து கடந்த 11-ந் தேதி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த 2 சுயேச்சை உறுப்பினர்களில் ஒருவரான ஜானகி திடீரென தான் கடத்தப்பட்டதாக தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் புகார் மனு அனுப்பினார்.

மேலும் தேர்தல் நடந்த அன்று, நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி அவர் வெளிநடப்பு செய்தார். இதையடுத்து தேர்தல் நடத்தினால் விரும்பத்தகாத சூழல் ஏற்படும் எனக்கூறி தலைவர் பதவிக்கான தேர்தலை, தேர்தல் நடத்தும் அதிகாரி ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதே போல துணைத்தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கோபிநாத், ஆணையாளர்கள் ஜெகதீஸ்வரன், கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடந்தது. தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த சுமதி என்பவரும், தி.மு.க.வை சேர்ந்த லட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ரகசிய வாக்கெடுப்பில் பா.ம.க.வை சேர்ந்த சுமதி 7 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க.வை சேர்ந்த லட்சுமி 6 வாக்குகள் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் மாலை 3 மணிக்கு துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த 6 உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆனால் அ.தி.மு.க.-பா.ம.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் துணைத்தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்