ஆசிரியைகள் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - பள்ளிக்கூடத்தை உறவினர்கள் முற்றுகை

பாளையங்கோட்டை அருகே ஆசிரியைகள் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-30 23:15 GMT
ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள், செங்கல் சூளை தொழிலாளி. இவருடைய 2-வது மகள் பேச்சியம்மாள் (வயது 15). இவர் அருகில் உள்ள பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இருக்கும் குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அரையாண்டு தேர்வில் பேச்சியம்மாள் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக தெரிகிறது. இதை ஆசிரியைகள் கண்டித்து உள்ளனர். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த பேச்சியம்மாள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார், பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை நடத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள், அந்த பள்ளிக்கூடம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளிக்கூட நிர்வாகத்தை கண்டித்து தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், “அரையாண்டு தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால், பேச்சியம்மாளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேசி உள்ளனர். 1 மணி நேரம் அவர்களை நிற்க வைத்து பேசி, வேறு பள்ளியில் மாணவியை சேர்க்குமாறு கூறி உள்ளனர். அதையும் மீறி பள்ளிக்கு சென்ற மாணவியை தினமும் திட்டி, அடித்து உள்ளனர். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற பேச்சியம்மாள் ஆசிரியைகளால் விரட்டியடிக்கப்பட்டதால், மனம் உடைந்து வீட்டுக்கு வந்து சீருடையுடன் தூக்குப்போட்டு இறந்து விட்டார். எனவே, இதற்கு காரணமான ஆசிரியைகள், பள்ளிக்கூட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலீசாரிடம் கூறினர்.

இதையடுத்து போலீசார் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபுவிடம் மனு கொடுத்தனர். அதில் மாணவியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

மேலும் செய்திகள்