பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய 6 பேர் கைது - டிக்-டாக்கில் வெளியிட்டதால் பிடிபட்டனர்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டி டிக்-டாக்கில் வெளியிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-01-30 23:00 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த சேலை கிராமத்தை சேர்ந்தவர் எட்டியப்பன். இவரது மகன் கவியரசு என்கிற அப்புடு (வயது 19). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதியன்று கவியரசுவின் பிறந்த நாளையொட்டி அவரது நண்பர்கள் அன்று இரவு சேலை கிராமத்தில் உள்ள காமராஜபுரம் விளையாட்டு மைதானம் அருகே வித்தியாசமான முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாட முடிவு செய்தனர்.

அவர்கள் காமராஜபுரம் விளையாட்டு மைதானம் பகுதியில் சாலையை வழிமறித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், இடையூறாக கூட்டமாக ஒன்றாக நின்று பெரிய அளவிலான கேக்கை பட்டா கத்தியால் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி ஆட்டம் பாட்டத்துடன் இருந்தனர். அப்போது கவியரசுவின் நண்பர்களான ஏகாட்டூரை சேர்ந்த கல்லூரி மாணவரான மணிகண்டன் (22), சதீஷ்குமார் (26), மனோஜ்குமார் (25), விக்னேஷ் (23), சக்திவேல் (22) ஆகியோர் கத்தியை சுழற்றியபடி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அவர்கள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளமான டிக்- டாக்கில் வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசு மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், சதீஷ்குமார், மனோஜ்குமார், விக்னேஷ், சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து பட்டா கத்தியை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்