இந்திரா காந்தி மீது குற்றம்சாட்டிய தேசியவாத காங்கிரஸ் மந்திரி அவாத்; காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

இந்திரா காந்தி ஜனநாயகத்தில் குரல்வளைய நெரிக்க முயற்சித்தார் என்று தேசியவாத காங்கிரஸ் மந்திரி ஜிதேந்திர அவாத் பேசினார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2020-01-30 23:51 GMT
மும்பை,

சவிதான் பச்சோவ் சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு பீட்டில் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி ஜிதேந்திர அவாத் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

நாட்டில் 1975-ம் ஆண்டு அவசர நிலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் அவர் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயற்சித்தார்.

இதற்கு ஆமதாபாத், பாட்னாவில் இருந்து மாணவர்களின் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்திராகாந்தி அதிகாரத்தை பறிகொடுத்தார். அதேபோல தற்போது அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து நிலவுவதை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிலையில், ஜனநாயகத்தின் குரல்வளையை இந்திராகாந்தி நெரிக்க முயற்சித்தார் என்று மந்திரி ஜிதேந்திர அவாத் பேசியதற்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த மந்திரி அசோக் சவான் கூறுகையில், “இந்திரா காந்தி நாட்டின் ஒற்றுமைக்காக தனது உயிரையே தியாகம் செய்தது உலகுக்கு தெரியும். எங்கள் தலைவர்கள் பற்றி யாராவது அவமரியாதையாக பேசினால், தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

காங்கிரஸ் எதிர்ப்பை தொடர்ந்து, மந்திரி ஜிதேந்திர அவாத் விளக்கம் அளித்து கூறுகையில், “அவசர நிலை பிரகடனம் எப்படி அரசியலமைப்புக்கு எதிரானது என்று மக்கள் நினைத்தார்களோ, அதேபோன்ற நெருக்கடி நிலை தற்போது நிலவுகிறது. இதனை ஒப்பிடும் வகையில் தான் பேசினேன். இந்திரா காந்தியை அவமதிப்பு செய்யவில்லை” என்றார்.

மேலும் செய்திகள்