ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2020-01-31 00:04 GMT
புதுச்சேரி, 

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ள தனவேலு எம்.எல்.ஏ. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் பொதுமக்களுடன் ஊர்வலமாக சென்று கவர்னரிடம் புகார் கடிதம் கொடுத்தார்.

இந்தநிலையில் தனவேலு எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து வலியுறுத்தினார்கள். இதுதொடர்பான கடிதத்தை அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தனவேலு. தொடர்ந்து அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சி மேலிடத்தின் ஒப்புதலை பெற்று அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கவர்னரை சந்தித்து இந்த ஆட்சியை மாற்றவேண்டும், கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். எனவே அவரை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம். இதில் சபாநாயகர் உரிய முடிவினை எடுப்பார்.

அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் முதல்-அமைச்சர், நான் உள்பட அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம். பாகூர் தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் உள்ளனர். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு புதுவையில் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

மேலும் செய்திகள்