ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக் கூடாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தலையிடக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-01-31 00:21 GMT
புதுச்சேரி, 

புதுவையில் 2 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஏன் ஹெல்மெட் அணிவதில்லை? என்ற பொதுவான கேள்வி சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது. இதை நான் முதல்-அமைச்சரிடம் கேளுங்கள் என்று கூறினேன்.

கடந்த 2017-ம் ஆண்டு ஹெல்மெட் அணிவது தொடர்பாக போக்குவரத்து ஆணையர், காவல்துறையினரால் கூட்டு முயற்சி உருவாக்கப்பட்டபோது அவர் அதை வெளிப்படையாக தடுத்தார். அதன்பின் அந்த வேகத்தை மீண்டும் பெற முடிய வில்லை.

ஒரு சிலருக்கு அபராதம் விதிப்பதன் மூலம் சட்டத்தை அமல்படுத்துவதில் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாது. சட்டத்தை அமலாக்குவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நேரடியாக தடுக்கப்படுகிறது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் விபத்தில் பலியானவர்களின் பாதுகாப்பினை சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதில்லை. இதனால் அவரை சார்ந்த சமூகத்திற்கு வாழ்நாள் முழுவதும் இழப்பு ஏற்படுகிறது.

விபத்தில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினராக உள்ளனர். எனவே சட்டத்தை அமல்படுத்துவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக்கூடாது. இது ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பினை பலவீனப்படுத்துகிறது.

மேலும் அபராதம் விதிப்பது தொடர்பான கோப்பு நீண்ட நாட்களாக அமைச்சரிடம் உள்ளது.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்