கா்நாடகத்தில் நாளை முதல் அமல்; பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக டீ, காபி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Update: 2020-01-31 00:29 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசு மற்றும் பால் கூட்டமைப்பு சார்பில் நந்தினி பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கும், பால் கூட்டமைப்புக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பால் விலையை உயர்த்துவது குறித்து கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவர் பாலசந்திர ஜார்கிகோளி தலைமையில் பெங்களூருவில் கடந்த மாதம் (டிசம்பர்) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பால் விலையை ரூ.3 முதல் ரூ.4 வரை உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கா்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பால் விலையை ரூ.3 முதல் ரூ.4 வரை உயர்த்துவதற்கு அரசு அனுமதிக்கவில்லை. விவசாயிகளின் நலன் கருதி பால் விலையை ரூ.2 மட்டும் உயர்த்தி கொள்ளலாம் என்று பால் கூட்டமைப்பிடம் அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பால் விலையை உயர்த்துவது குறித்து கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பாலசந்திர ஜார்கிகோளி தலைமையில் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பால் விலையை ரூ.2 உயர்த்துவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் நந்தினி பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதற்கு ஏற்கனவே கர்நாடக அரசும் அனுமதி அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட விலையில், ரூ.1-யை விவசாயிகளுக்கும், மீதி ஒரு ரூபாயை ஒவ்வொரு மாவட்ட பால் கூட்டமைப்புக்கு வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விலை உயர்வு நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நீல நிற பாக்கெட்டில் வரும் ஒரு லிட்டர் பாலின் விலை (லிட்டர்) ரூ.36-ல் இருந்து ரூ.38 ஆகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பாலின் விலை ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயருகிறது. இதுபோன்று, நந்தினி தயிரின் விலையும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவர் பாலசந்திர ஜார்கிகோளி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாலின் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பால் விலை உயர்வு தொடர்பாக நடந்த ஆலோசனையில் ஒரு லிட்டர் நந்தினி பாலின் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசும் விலை உயர்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது. பால் விலை உயர்வு பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து (நாளை) அமலுக்கு வருகிறது.

பால் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும். மக்களுக்கும் பாதிக்கப்பட கூடாது. அதே நேரத்தில் விவசாயிகளும் பாதிக்க கூடாது என்பதற்காக தான் 2 ஆண்டுக்கு பின்பு ரூ.2 மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. பால் விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதால் அதன்மூலம் தயாரிக்கப்படும் டீ, காபியின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்