பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் ஒரு வாழைப்பழம் வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

சத்துணவுடன் தினந்தோறும் ஒரு வாழைப் பழத்தை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2020-01-31 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரம் பின்வருமாறு:-

விவசாயி துரைசாமி:- மரவள்ளிகிழங்குக்கு உரிய விலை கிடைப்பதில்லை. கூட்டுறவுத்துறை மூலம் மரவள்ளி விற்பனை செய்யப்பட்டால் லாபம் கிடைக்கவில்லை என்றாலும், ந‌‌ஷ்டம் ஏற்படாது. எனவே விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு எடுக்க வேண்டும்.

கலெக்டர் மெகராஜ்:- உரிய முயற்சி எடுக்கப்படும்.

விவசாயி நல்லாக்கவுண்டர்:- ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தினந்தோறும் நீரா பானம் கிடைக்கிறது. அதேபோல் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீரா பானம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:-நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி பெரியதம்பி:-2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வராமல் உள்ளது. ராசிபுரத்தில் இருந்து போதமலை செல்லும் வழியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே பயிர் காப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் புதுப்பாளையம் அருகே உள்ள சாணார்புதூர் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயி பாலசுப்பிரமணியம்:- மரவள்ளிகிழங்குக்கு அடுத்தப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் வாழைக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. எனவே அதை சத்துணவுடன் சேர்த்து தினந்தோறும் ஒரு வாழைப் பழத்தை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினால் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும். மேலும் உர விலையை குறைக்க மத்திய அரசுக்கு கலெக்டர் அறிக்கை அனுப்பிவைக்க வேண்டும்.

கலெக்டர்:-பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி சரவணன்:-அனைத்து விதமான மானியங்களும் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:-உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பாலமுருகன், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்