பெரம்பலூரில் சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-02-01 23:00 GMT
பெரம்பலூர்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவைக்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சமூகநீதி மாணவர் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பர்வேஷ் பா‌ஷா தலைமை தாங்கினார். த.மு.மு.க.வின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன், செயலாளர் குதரத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ்அலி, தலித் மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.ம.மு.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்அலி, தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கைவிட வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவைக்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் போலீசார் திரும்ப பெற வேண்டும்.

5, 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். குரூப்-2, 4 தேர்வில் நடைபெற்றுள்ள மோசடியை முறையாக விசாரிக்க வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். முன்னதாக த.மு.மு.க.வின் தொண்டரணி மாவட்ட செயலாளர் முகமது பாரூக் வரவேற்றார். முடிவில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட துணை செயலாளர் முகமது நவாஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்