தொழில் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் - கலெக்டர் வழங்கினார்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழில்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வீரராகவராவ் சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2020-02-01 22:30 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தொழில்திறன் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கி மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், தொழில்திறன் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:- மத்திய அரசின் உத்தரவின் பேரில் இந்திய அளவில் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். கல்வி வளர்ச்சி, பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன வசதி மேம்பாடு, தொழில்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல், அடிப்படை உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கவுசல் கேந்திரா, கவுசல் விகாஸ் யோஜ்னா போன்ற திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மூலம், தமிழ்நாடு தொழில்திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலமாகவும் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்னணு சாதனங்கள் பழுதுபார்த்தல், பிளம்பர், வெல்டர், சமையலர், ஆட்டோமொபைல் டெக்னாலஜி போன்ற பல்வேறு தொழில்திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் என 3 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2019-20-ம் ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்து 467 இளைஞர்கள் பல்வேறு தொழில்திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். இவ்வாறு பயிற்சி பெறும் இளைஞர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த ஏதுவாக மாவட்ட அளவிலான தொழில்திறன் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில் திறன் போட்டிகள் நடத்தப்படும்.

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் இத்தகைய திட்டங்களை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குனர் ரவி பாஸ்கர், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், கண்ணபிரான் மில்ஸ் குருநாதன், டாடா மோட்டார்ஸ் ராஜகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்