சங்ககிரியில் சி.ஐ.டி. போலீசார் எனக்கூறி கத்தியை காட்டி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயற்சி 2 பேர் கைது

சங்ககிரியில் சி.ஐ.டி. போலீசார் எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-02 23:00 GMT
சங்ககிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27), தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர்கள் நேற்று முன்தினம் ஒரு காரில் புதுச்சேரிக்கு சென்று விட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர்.

இந்த காரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வழிமறித்தனர். பின்னர் அரவிந்திடம் சி.ஐ.டி. போலீசார் என ஒருவன் கூறும்போதே, மற்றொருவன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.

மேலும் அந்த நபர் அரவிந்தை கன்னத்தில் அடித்துள்ளார். இதையடுத்து அவர்கள் சத்தம் போடவே அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் ஓடி வந்தனர். அதன்பிறகு அவர்கள் அந்த மர்ம நபர்களை பிடித்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், போலீஸ்காரர்கள் இல்லை என்பதும், சங்ககிரி அருகே உள்ள ஆவரங்கம்பாளையத்தை சேர்ந்த மோகன் (36) மற்றும் மொசக்கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த அருள்மணி (31) என்பதும் தெரியவந்தது. மேலும் சி.ஐ.டி. போலீசார் எனக்கூறி அவர்கள் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதனால் மோகன், அருள்மணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இதில் அருள்மணி மீது ஏற்கனவே சங்ககிரி போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்