விபத்தில் காயம் அடைந்தவர்களை அழைத்து செல்ல இயலாததால் உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சை உறவினர்கள் முற்றுகை

விபத்தில் காயம் அடைந்தவர்களை அழைத்து செல்ல இயலாததால் உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் டிரைவர் இல்லாத ஆம்புலன்சை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-02-03 22:15 GMT
உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜப்பார். இவருடைய மகன் மாலிக் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது ஆட்டோவில் அதே ஊரைச் சேர்ந்த நவ்சாத் என்பவரை உடன்குடிக்கு அழைத்து சென்றார். அங்கு நவ்சாத் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, அதே ஆட்டோவில் குலசேகரன்பட்டினத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

உடன்குடி ஒண்டிவீரன் நகர் பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்காக பன்றி ஓடியது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த மாலிக், நவ்சாத் ஆகிய 2 பேருக்கும் உடன்குடி தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கை எலும்பு முறிவு ஏற்பட்ட மாலிக்கை சிகிச்சைக்காக உடன்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது உடன்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி இருந்த 108 ஆம்புலன்சுக்கு டிரைவர் இல்லாததால், தனியார் வாகனத்தில் மாலிக்கை அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாலிக்கின் உறவினர்கள், 108 ஆம்புலன்சை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள், தனியார் வாகனத்தில் மாலிக்கை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

உடன்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 108 ஆம்புலன்சின் டிரைவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அந்த ஆம்புலன்ஸ் அங்கு காட்சிப்பொருளாகவே உள்ளது. அவசர காலங்களில் திருச்செந்தூர், நாசரேத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ், உடன்குடிக்கு வந்து நோயாளிகளை அழைத்து செல்வதால் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே உடன்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுக்கு உடனே டிரைவர் நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்