பேரணாம்பட்டு அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுத்தைகுட்டி - வனத்துறையினர் ஏணி மூலம் மீட்டனர்

பேரணாம்பட்டு அருகே மாந்தோப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து தவித்த சிறுத்தை குட்டி வனத்துறையினர் வைத்த ஏணி மூலம் வெளியே வந்தது.

Update: 2020-02-04 07:00 GMT
பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் 5-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் குட்டிகளுடன் சுற்றி வருகின்றன. வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளையும், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் உள்ள பட்டிகளில் இருக்கும் ஆடு, மாடுகளையும் அவ்வப்போது வேட்டையாடி வருகின்றன.

இந்த நிலையில் பேரணாம்பட்டு டவுனில் இருந்து அரவட்லா மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் பேரணாம்பட்டில் இருந்து சுமார் 1¼ கிலோமீட்டர் தூரத்தில் சிலம்பு கோவில் அருகில் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் விவசாயி கோவிந்தராஜிக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது.

இந்த மாந்தோப்பில் சுமார் 9 அடி உயரத்திற்கு சிமெண்டில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் கோவிந்தராஜ், அவரது பேரன் ரமே‌‌ஷ் ஆகியோர் மாந்தோப்பிற்கு சென்ற போது தண்ணீர் தொட்டியில் இருந்து திடீரென உறுமல் சத்தம் கேட்டது. தொட்டியை எட்டி பார்த்த போது அதில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை குட்டி ஒன்று ஒரு அடி தண்ணீரில் தவறி விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து பேரணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா, வனவர் ஹரி மற்றும் வனத் துறையினர் விரைந்து சென்று சிறுத்தை குட்டி தவறிவிழுந்து கிடந்த தண்ணீர் தொட்டியை பார்வையிட்டனர்.

மேலும் தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, உதவி வன பாதுகாவலர் முரளிதரன், தீயணைப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவ குழுவினருடன் அரவட்லா மலைப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

சிறுத்தையை உயிருடன் பிடிக்க மூங்கில் ஏணியை தண்ணீர் தொட்டியில் விடுவது, மயக்கவியல் நிபுணர் மூலம் மயக்க மருந்து செலுத்துவது மற்றும் பிரத்யேக 3 அடி உயர கூண்டு வைப்பது என 3 வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தனர்.

அரவட்லாமலை கால்நடை மருத்துவமனை டாக்டர் ரமே‌‌ஷ் சிறுத்தையை பார்த்து நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர் சுமார் 10 அடி மூங்கில் ஏணியை தண்ணீர் தொட்டியில் விட்டுவிட்டு 10 அடி தூரத்தில் பாதுகாப்பாக நின்றனர்.

சில நொடிகளில் ஏணிப் படியில் சிறுத்தை குட்டி ஏறி வெளியே வந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஓடியது.

இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினரிடம் இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் தினமும் இவ்வழியாக பேரணாம்பட்டிற்கு அரவட்லாமலை கிராமமக்கள், மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் சென்று வர மிகவும் அச்சப்படுகின்றனர். இந்த சிறுத்தை, தாய் சிறுத்தையுடன் இப்பகுதியில் நடமாடிக்கொண்டிருக்கும் என்பதால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வேறு எங்காவது விட்டிருக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அதற்கு மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா தொட்டியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை வனப்பகுதிக்குள்ளே தான் சென்றது. வீடுகள் நிறைந்த பகுதிக்கா சென்றது என்றார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்