ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி மாணவர் விடுதி முதல்- அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்

நெய்குப்பையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவர் விடுதியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2020-02-04 23:00 GMT
வேப்பந்தட்டை,

தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும் மற்றும் கட்டணமில்லா கல்வி, விலையில்லா பஸ் பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரண பொருட்கள், காலணிகள், இடைநிற்றலை குறைக்க ஊக்க தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில், புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவ- மாணவி களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், புதிதாக விடுதிகளை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், வேப்பந்தட்டை வட்டம் நெய்குப்பையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர் விடுதியை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மரக்கன்றுகளை நட்டார்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவர் விடுதி திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அங்கு குத்துவிளக்கேற்றி, விடுதி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், முதல்- அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட விடுதியானது 50 மாணவர்கள் மற்றும் 5 பணியாளர்கள் தங்கும் வகையில் முதல் தளமும் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் உணவகம், அலுவலகம், காப்பாளர் தங்கும் அறை, சமையலறை, குளியலறைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்தும் வசதிகள் அடங்கிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகளுடன் மாணவர் விடுதியானது எழிலார்ந்த அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிரு‌‌ஷ்டி, நிர்வாக பொறியாளர் (தாட்கோ) காதர்பாட்‌ஷா, தனி வட்டாட்சியர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்