திருப்பூரில் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2¼ கோடியில் புதிய கட்டிடம்: தீயணைப்புத்துறை இயக்குனர் ஆய்வு

திருப்பூரில் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2¼ கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதுதொடர்பாக தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-02-04 22:56 GMT
திருப்பூர்,

திருப்பூர் குமார் நகரில் வடக்கு தீயணைப்பு நிலையம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி அலுவலகம் உள்ளது. இதற்காக ஒரே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

புதிதாக கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 33 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதில் மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி அலுவலகம், வடக்கு தீயணைப்பு நிலையம் அமைய உள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு கட்டிடம் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர்(பொறுப்பு) சைலேந்திர பாபு நேற்று காலை திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்பு மற்றும் மீட்பு கருவிகள் செயல்படும் விதம், தீ விபத்து குறித்து அழைப்பு வந்தால் அலுவலகத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் எவ்வளவு நிமிடத்தில் வெளியே புறப்பட்டு செல்கிறது என்று ஆய்வு செய்தார்.

மேலும் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கான புதிய கட்டிட வரைபட விவரம் குறித்தும் அதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பொறியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அங்கு பணியாற்றும் தீயணைப்பு வீரர்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

தொழில் நகரான திருப்பூரில் உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரை பீய்ச்சி அடிக்க உதவும் உயரமான ஏணிகள் கொண்ட தீயணைப்பு வாகனம், தண்ணீர் லாரி, தீயணைப்பு நவீன கருவிகள், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து புகையை வெளியேற்ற உதவும் கருவி தேவை என்று இயக்குனரிடம், அதிகாரிகள் வேண்டுகோள் வைத்தனர். அதன்பிறகு அவினாசி தீயணைப்பு நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அவினாசி தீயணைப்பு நிலையத்துக்கும் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களையும் அவர் கேட்டறிந்தார். பின்னர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திலும் அவர் ஆய்வு செய்தார்.

முன்னதாக வடக்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் சந்தன மரக்கன்றை இயக்குனர் நட்டார். இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி வெங்கடரமணன், வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்