குப்பை உரமாக்கல் மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பூர் காவிலிபாளையம்புதூரில் குப்பை உரமாக்கல் மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-04 23:00 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட காவிலிபாளையம்புதூரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அந்த பகுதியில் குப்பை உரமாக்கல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அங்கு தொடர்ந்து குப்பை உரமாக்கல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு செயல்பட்டு வரும் குப்பை உரமாக்கல் மையத்தை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு கொடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கே வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்லாமல் அங்கேயே காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அணைபாளையம் போலீஸ் சோதனைசாவடி அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர் நல அலுவலர் டாக்டர் பூபதி மற்றும் 15 வேலம்பாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

குப்பை உரமாக்கல் மையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதுடன், அந்த பகுதி முழுவதும் ஈக்கள் மொய்க்கின்றன. இதேபோல் அதன் அருகிலேயே பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதுடன், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே மையத்தை உடனடியாக நிறுத்துவதுடன், வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து அங்கு செயல்பட்டு வரும் குப்ைப உரமாக்கல் மையத்ைத மையத்தை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் சமரசமடைந்த பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்