மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2020-02-05 00:23 GMT
கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). இவர் கோவையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 7, 8-ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி 30-ந் தேதி வரை அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் எல்லை மீறியதால் மன முடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது தோழிகளான சக மாணவிகளிடம் சொல்லி அழுது உள்ளார். இதையடுத்து ஒரு ஆசிரியையிடம் முறையிட்டதின் பேரில் ஆசிரியர் நடராஜன் மீது பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் புகார் எழுதி போடப்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி ஆசிரியர் நடராஜனை கண்டித்தனர்.

பள்ளி ஆசிரியர் கைது

இருப்பினும் நடராஜன் தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் போில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் நடராஜன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனா்.

இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி இரவு நடராஜன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் நடராஜன் மேலும் சில மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோவில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு பள்ளி ஆசிரியர் நடராஜன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் ஒழுங்கு நடவடிக்கையாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார், என்றார்.

மேலும் செய்திகள்