துறையூர் அருகே, அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு - போலீசார் விசாரணை

துறையூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-06 06:00 GMT
துறையூர்,

துறையூர் அருகே உள்ள கீழகுன்னுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). விவசாயியான இவர், தனது உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று நீலகிரி சென்று விட்டார். இவருடைய மனைவி, வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.89 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

இதேபோல, அருகில் உள்ள தன்னாசி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.

இந்த திருட்டு குறித்த புகார்களின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடமாநிலத்தினர் சிலர் போர்வை, கம்பளி விற்பதுபோல இப்பகுதியை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்று தெரியவில்லை. அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்