ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற வைத்த அமைச்சர்

முதுமலை யானைகள் முகாம் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-07 00:30 GMT
மசினகுடி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று முன்தினம் முதுமலைக்கு வந்தார். அங்குள்ள அப்பர்கார்குடி என்ற இடத்தில் வனத்துறை சொகுசு பங்களாவில் அவர் தங்கினார். நேற்று காலை 9.30 மணிக்கு தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அமைச்சர் வந்தார். தொடர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலில் நடந்த பூஜையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொள்வதற்காக சென்றார். அப்போது அங்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த ஆதிவாசி சிறுவனை அழைத்த அமைச்சர், தனது காலணியை கழற்றும்படி கூறினார். உடனே செய்வதறியாது திகைத்த சிறுவன், அமைச்சரின் இடது காலில் இருந்த காலணியை கழற்றினான்.

சர்ச்சை

இதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட அமைச்சர், சிறுவனை அங்கிருந்து அழைத்து செல்லும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்படி உடனடியாக சிறுவன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டான். அதன்பின்னர் அமைச்சரின் வலது காலில் இருந்த காலணியை, அவரது உதவியாளர் கழற்றினார். தொடர்ந்து பூஜையில் கலந்துகொள்ள அமைச்சர் கோவிலுக்குள் சென்றார். அமைச்சரின் செயல் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சரின் செயலுக்கு பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்