தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Update: 2020-02-06 23:00 GMT
தர்மபுரி,

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பயனாளிகளுக்கு அசில் இன நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 225 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 875 மதிப்பில் விலையில்லா நாட்டுக்கோழிகுஞ்சுகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

உயர் கல்வித்துறையில் சிறந்த வளர்ச்சியை தமிழகம் பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களில் 99 சதவீத மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து வருகிறார்கள். மாணவர்களின் தேவைக்கேற்ப புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாலக்கோடு பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.23 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.4 கோடியே 36 லட்சம் நிதி கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மையம்

மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 லட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கோழி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 4500 பெண் பயனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அழிந்துவரும் ஆலம்பாடி மாட்டினத்தை பாதுகாக்க பல்லேனஅள்ளி கிராமத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் இந்த ஆராய்ச்சி மையம் செயல்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த விழாவில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், கால்நடை துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் வேடியப்பன், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், நகர செயலாளர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி, தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்