கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடலூர் உள்பட 14 அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-06 23:00 GMT
கடலூர்,

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சீனாவில் இருந்து வருவோரை தனி வார்டில் வைத்து தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி கடலூர் மாவட்டத்திற்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வந்த 35 பேரை மாவட்ட சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் அவர்களிடம் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று கண்டறியப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதற்கிடையே கேரளாவில் இருந்து தொடர் காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திட்டக்குடி வந்த ஒருவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது பற்றி மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி உள்பட 14 அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

கடலூரில் தலைமை மருத்துவமனையில் 8 படுக்கை கொண்ட தனி வார்டும், மற்ற தாலுகா மருத்துவமனைகளில் 4 படுக்கை கொண்ட தனி வார்டும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவமனைக்குள் வந்து செல்வோர் கை கழுவி விட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்