‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-07 00:30 GMT
தேனி,

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் உள்பட மொத்தம் 4 மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர் என 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களை தொடர்ந்து, சென்னையை சேர்ந்த மற்றொரு மாணவரான ரிஷிகாந்தின் தந்தை ரவிக்குமார், தர்மபுரியை சேர்ந்த இடைத்தரகர் முருகன் என்ற ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இடைத்தரகர்

இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தேடப்படும் இடைத்தரகர் ரஷீத் என்பவர் முக்கிய நபராக கருதப்படுகிறார். அவர் மூலமாகவே இந்த மிகப்பெரிய அளவிலான மோசடி அரங்கேறியது தெரியவந்துள்ளது. ஆனால், ரஷீத் எங்கே இருக்கிறார்? என்பது மர்மமாக உள்ளது. பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திய போதிலும், ரஷீத் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

‘நீட்’ தேர்வில் மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்து இருப்பதாக தெரியவந்தது. அதன்பேரில், தேசிய தேர்வு முகமையிடம் பெற்ற தகவல்களை கொண்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

மேலும் ஒரு மாணவர்

இந்நிலையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதவன் மகன் பவித்ரன் என்பவரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பவித்ரன் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் படித்து வந்துள்ளார். இதையடுத்து பவித்ரனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று பிடித்தனர்.

பின்னர் பிற்பகலில் அவரை விசாரணைக்காக தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவர் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தை தலைமறைவு

இதையடுத்து நேற்று இரவு மாணவரை மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர், அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இந்த மாணவரும் ஆள்மாறாட்டம் செய்தே மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளார். இவர் தேர்வு எழுதவே இல்லை. அவருக்கு பதில் வேறு நபர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளார். இதற்கு மாணவரின் தந்தை உடந்தையாக இருந்துள்ளார். அவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்’ என்றார்.

ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்