முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2020-02-08 23:57 GMT
புதுச்சேரி,

தைப்பூச விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

கதிர்காமம் முருகன் கோவில், ரெயில்நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியன் கோவில், முதலியார்பேட்டை வெள்ளாழ வீதி முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் பால்குடம், காவடி ஊர்வலங்கள் நடந்தன.

பால்குட ஊர்வலம்

கோவிந்தசாலை ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவிலில் 4-ம் ஆண்டு தைப்பூச விழாவினை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜோதி தரிசனம்

புதுவை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் முதலியார்பேட்டை கடலூர் சாலையில் உள்ள ராமலிங்க சாமிகள் கோவிலில் காலை, பிற்பகல் மற்றும் இரவில் ஏழு திரை விலக்கி அருட்பெருஞ்ஜோதி காட்சி வழிபாடு நடந்தது. பிற்பகலில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அரியாங்குப்பம் காலாந்தோட்டத்தில் உள்ள சிவசுப்ரமணியர் கோவிலில் காலை 7 மணிக்கு மூலவருக்கு பால், மஞ்சள், திரவியம், சந்தனம் மற்றும் மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

இதையடுத்து 108 பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சாமி வீதி உலா வந்தார்.

பூரணாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தனி சன்னதியில் உள்ள சுப்ரமணியர், அரும்பார்த்தபுரம் செங்கழுநீரம்மன் கோவில் உள்பட புதுவையில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்கள், வள்ளலார் மன்றங்களில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது.

மேலும் செய்திகள்