கொல்லத்தில் சோகம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குளத்தில் மூழ்கி சாவு நாகர்கோவிலை சேர்ந்தவர்கள்

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-02-09 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் கரிய மாணிக்கம்புரத்தில் உள்ள கரியமாணிக்க ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு விக்னேஷ் (20), சரவணன் (17) என்ற 2 மகன்கள் இருந்தனர். நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பள்ளியில் சரவணன் பிளஸ்-2 படித்து வந்தான்.

சுப்புலட்சுமிக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம். இந்தநிலையில் சுப்புலட்சுமியின் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி கொல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று அதிகாலையில் செல்வராஜ், சுப்புலட்சுமி, விக்னேஷ், சரவணன் ஆகிய 4 பேரும் கொல்லம் சென்றனர்.

அங்கு சுப்புலட்சுமியின் பெற்றோர் வீட்டில் தங்கினர். மாலையில் செல்வராஜ், மகன்களுடன் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது அங்குள்ள ஒரு குளத்தில் குளிக்க முடிவு செய்தனர்.

2 மகன்களுடன் சாவு

இதையடுத்து மூத்த மகன் விக்னேஷ் முதலில் குளத்தில் இறங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் குளத்தில் சகதி நிறைந்து காணப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் விக்னேஷ் தண்ணீரில் தத்தளித்தார். மேலும், தன்னை காப்பாற்றும்படி அவர் சத்தம் போட்டார்.

உடனே செல்வராஜிம், சரவணனும் தண்ணீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களும் குளத்தில் மூழ்கினர். பின்னர் சிறிது நேரத்தில் 3 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு 3 பேருடைய உடல்களையும் நாகர்கோவிலுக்கு கொண்டு வர உறவினர்கள் கொல்லத்துக்கு சென்றுள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கொல்லத்துக்கு சென்ற தந்தை, 2 மகன்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்