தாவரவியல் பூங்காவில் நடந்த தைத்திருவிழா நிறைவு

தாவரவியல் பூங்காவில் 3 நாட்கள் நடைபெற்ற தைத்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

Update: 2020-02-09 23:43 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை சார்பில் தாவரவியல் பூங்காவில் தைத்திருவிழா என்ற பெயரில் கண்காட்சி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

இதில் வேளாண் துறையின் நாற்றங்கால், மதகடிப்பட்டு அரசு பழத்தோட்ட பண்ணை, தாவரவியல் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட செடிகள், காய்கறி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. மலர் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

அரங்குகள்

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி மாநில தோட்டக்கலை இயக்கம், வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை, பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், காரைக்கால் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவை சார்பில் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து தனித்தனியாக அரங்குகள் அமைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மலர்கண்காட்சி

விழாவில் பார்வையாளர்களை கவரும் வகையில் மாட்டு வண்டி பயணம், மாதிரி கிராம சந்தை, தப்பாட்டம், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவையொட்டி அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று காலை தாவரவியல் பூங்காவுக்கு வருகை புரிந்து, தைத் திருவிழாவை பார்வையிட்டார். பின்னர் அவர், மாட்டுவண்டியில் பயணம் செய்தார்.

விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் கண்காட்சி மற்றும் செடிகளை பார்வையிட்டனர். சிறுவர் ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். இந்த திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்