கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு

கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-02-10 00:35 GMT
புதுச்சேரி,

வாரஇறுதி நாட்களில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வது வழக்கம். சுகாதாரம், மழைநீர் சேமிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று காலை கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து கிரண்பெடி சைக்கிளில் சென்றார்.

ரெட்டியார்பாளையம் அருகே சென்ற போது அங்கு சாலையின் நடுவில் போக்கு வரத்துக்கு இடையூறாக மாடுகள் நின்றுகொண்டு இருந்ததை கவனித்தார். உடனே சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த மாடுகளை தனது செல்போனில் படம் பிடித்தார்.

ஏரியில் ஆய்வு

அவரது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த மாடுகளை அப்புறப்படுத்தினர். அதன்பின் கனகன் ஏரிக்கு கிரண்பெடி சென்றார்.

அவர் ஏரிக்கரையை சுற்றிலும் நடைபாதையில் நடந்து சென்று அங்கு ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார்.

பின்னர் அதிகாரிகளிடம் ஏரியில் தண்ணீரை அதிக அளவு சேமித்து வைக்க வேண்டும், அப்போது தான் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய வசதியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கண்டு ரசித்த கவர்னர் கிரண்பெடி மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

மாதந்தோறும் மதிப்பீடு

இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கனகன் ஏரியை சுற்றியுள்ள நடைபாதையில் மரக்கன்றுகள் நடப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவ-மாணவிகள் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டது. தற்போது அவை நன்றாக வளர்ந்துள்ளன. இது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பராமரிப்பு குறித்து மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்படும். இதில் சிறப்பாக பராமரிக்கும் குழுவினர் கவர்னர் மாளிகைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். கனகன் ஏரி தற்போது தூய்மையாக உள்ளது. மீன்கள் செத்து மிதக்கும் அபாயம் இல்லை.

அந்த பகுதியில் உள்ள மக்களின் பொழுதுபோக்கு இடமாக கனகன் ஏரி மாறி வருகிறது. உங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் பீட் போலீசாரின் உதவியை நாடலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்