கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2020-02-10 22:15 GMT
கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் செல்லும் தண்ணீரை பயன்படுத்தி சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன்அடிப்படையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை கிராமங்களில் நேற்று அதிரடியாக சாராயவேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மல்லிகைப்பாடி விளைச்சல்காட்டுமூலை வனப்பகுதியில் உள்ள ஒரு நீரோடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பேரல்களில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் பேரல்களில் இருந்த சாராய ஊறலை கைப்பற்றி, அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் போலீசார் சாராய ஊறல் அமைத்த நபர் யார்? என்று அக்கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாராய ஊறலை அமைத்தது மல்லிகைப்பாடியை சேர்ந்த சடையன் மகன் சுருளிவேல்(வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுருளிவேல் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்