கோ.பூவனூர் வரதராஜ பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலம் அருகே கோ. பூவனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-02-10 22:00 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே கோ.பூவனூர் ஸ்ரீராம் நகரில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு அர்ச்சகர் கோவிந்தராஜூலு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை பூஜைகள் செய்வதற்காக மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் மற்றும் வரதராஜ பெருமாள் அணிந்திருந்த வெண்கல கிரீடம், அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகை ஆகியவை திருடு போயிருந்தது தெரிந்தது.

இது குறித்த தகவலின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் அம்மன் நகையை திருடிச்சென்றது தெரிந்தது. உடைக்கப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்