அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மற்றும் விடுதிகளில் கழிவறை, குடிநீர், கேண்டீன், கட்டிடப்பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தும் தீர்வு காணப்படவில்லை.

இதனால் மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். கிளைத்தலைவர் வீரமுத்து முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பிடல் காஸ்ட்ரோ, கிளைச்செயலாளர் சக்திவேல் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

காலை 8.30 முதல் 11.30 மணி வரை நடைபெற்ற, போராட்டத்தையடுத்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கல்லூரி பேராசிரியர் கோவிந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். ஒப்புக்கொண்டவாறு ஒரு வார காலத்திற்குள் பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால், பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்