காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2020-02-10 22:45 GMT
தஞ்சாவூர்,

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்கவும் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து தஞ்சையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தஞ்சை ரெயில் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் கக்கறை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பின்னர் சுகுமாறன் கூறுகையில், ‘‘முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்தது போல் உள்ளது. இதற்காக விவசாயிகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இதனை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி சட்டம் இயற்ற வேண்டும். இது தொடர்பாக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் அரசு திரும்ப பெற வேண்டும்’’என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி

தஞ்சை மாநகர பா.ம.க. சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோபிசந்தர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ரேணுகாகோவிந்தராஜ், ராஜாத்தியம்மாள், முன்னரசு, மணிவண்ணன், அய்யப்பன், விஜயராகவன் மற்றும் உழவர் பேரியக்கம், இளைஞர் சங்கம், மகளிர் அணி, பாட்டாளி தொழிற்சங்கம், சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்