மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதவித்தொகை வழங்கக்கோரி முதியவர்கள் கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி ஏராளமான முதியவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2020-02-10 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இதில் விராலிமலை ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளர் செல்வராஜ் கொடுத்த மனுவில், கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள சிவன்கோவில், சித்தையன் கோவில், லெட்சுமி நாராயணபெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு மானிய நிலமாக சுமார் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் பல ஆண்டுகளாக குத்தகை தொகை செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே இந்த கோவில் நிலங்களை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்கு, ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் என குத்தகை விட வேண்டும். இதனால் கோவில்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் குத்தகையாக கிடைக்கும். எனவே கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

முதியோர் உதவித்தொகை

இதேபோல், முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் தனித்தனியாக மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் சுமார் 60 வயதை தாண்டிய முதியவர்கள். எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. எனவே எங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, திருநங்கைகளுக்கான வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 360 மனுக்கள் பெறப்பட்டது.

மடிக்கணினிகள்

கூட்டத்தில், ஆவுடையார்கோவில் தாலுகாவில் பணி புரிந்து வரும் 7 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. மேலும் சிறு சேமிப்புத்துறையில் 2019-ம் ஆண்டு சிறுசேமிப்பு வசூலில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மகளிர் முகவர் கவிதாவிற்கும், மாவட்ட அளவில் சிறந்த நிலை முகவராக சிவக்குமாருக்கும் பாராட்டு கேடயம் மற்றும் பரிசாக தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்