தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-10 23:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது உடன்குடி கிறிஸ்தியா நகரத்தை சேர்ந்த ஜோசப் பொன்சேகர் மனைவி பார்ப்பரா என்பவர் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அப்போது அவர் கையில் ஒரு பை வைத்து இருந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தபோது அங்கு இருந்த போலீசார் பார்ப்பரா வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு கேனில் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.

தொடா்ந்து போலீசார், பார்ப்பராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது பார்ப்பரா போலீசாரிடம் கூறும்போது, “நான் எங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவி குழுவில் வேலை பார்த்து வருகிறேன். 2017-ம் ஆண்டு சத்தியமூர்த்தி பஜாரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் குழுவிற்கு செலுத்த வேண்டிய ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை கொடுத்து செலுத்த சொன்னேன். ஆனால் அவர் பணத்தை செலுத்தவில்லை.இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அப்போது அந்த பெண் வெறும் ரூ.54 ஆயிரம் மட்டும்தான் வாங்கினேன் என்று கூறிவிட்டார். 

இதனால் நான் நீதிமன்றம் சென்று எனது பணத்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறினேன். இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சத்தியமூர்த்தி பஜாரில் சென்ற என்னை அந்த பெண், அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் அந்த பெண் என்னை தொடர்ந்து மிரட்டிவருகிறார். 

எனவே, மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி பெற்று தர வேண்டும் என்று மனு கொடுக்க வந்தேன் என்று கூறினார். இதனையடுத்து அவரை சிப்காட் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்