மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-10 23:00 GMT
நாமக்கல்,

மோகனூர் தாலுகா ராசிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் அன்புராஜ். இவரை சேந்தமங்கலம் தாலுகா தூசூருக்கு நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார் இடமாற்றம் செய்து உள்ளார். இந்த இடமாற்றத்தை கண்டித்தும், இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரியும் நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் முருகேசன், செயலாளர் பிரகா‌‌ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமக்கல் தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் ராமன் நன்றி கூறினார். இதையொட்டி இ-அடங்கலுக்கு தேவையான ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ராசிபுரம்

ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ராசிபுரம் வட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோ‌‌ஷங்களை எழுப்பினர்

இதேபோல மோகனூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மோகனூர் வட்ட தலைவர் அன்புராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் நல்லசிவம், பொருளாளர் இளையராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்