மகள்- மகன்கள் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்துகளை மீட்டுத்தர வேண்டும் முதியவர், கலெக்டரிடம் கோரிக்கை

நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், மகள்- மகன்கள் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்துகளை மீட்டுத்தர வேண்டும் என்று முதியவர், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கோரிக்கை வைத்தார்.

Update: 2020-02-10 23:47 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

493 பேர் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கூறினார்.

குளத்தை மீட்க...

குமரி மாவட்ட பச்சை தமிழகம் கட்சியினர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தக்கலை குமாரகோவில் அருகே மேலாங்கோடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மேலாங்கோட்டுகுளம் இருந்தது. ஒரு ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் காணப்பட்ட இந்த குளத்துக்கு புத்தனாறு கால்வாய் மற்றும் வேளான் குளத்தில் இருந்து நீர் வரத்து உள்ளது. இந்தநிலையில் இந்த குளம் தனிநபர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, மண்நிரப்பி அதில் தென்னை மரங்களை நட்டும், வீட்டை கட்டியும் உள்ளனர். இதனால் இந்த குளத்துக்கு நீர்வரத்து தடைபட்டதுடன், நிலத்தடி நீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த குளத்தையொட்டி பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. சிவாலய ஓட்டத்தில் 8-வது திருத்தலமாக திகழும் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சிவாலய ஓட்ட நிகழ்வின்போது வரும் பக்தர்கள் மேலாங்கோட்டு குளத்தில் நீராடி செல்வது வழக்கம். ஆனால் தற்போது குளம் முழுவதும் அபகரிக்கப்பட்டுள்ளதால், அங்கு சிறிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, குளத்தில் நீராடுவதற்கு பதில் தொட்டியில் பக்தர்கள் நீராடி செல்கின்றனர். இதனால் பக்தர்கள் மனவேதனைக்கு ஆளாகி இருக்கிறார்கள். வருகிற 21-ந் தேதி சிவாலய ஓட்டம் நடைபெறும் நிலையில் இந்த குளத்தில் பக்தர்கள் நீராட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பக்தர்கள் வசதி கருதியும், நீர்நிலைகளை பாதுகாக்கும் விதத்திலும் மேலாங்கோட்டு குளத்தை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

முறைகேடு...

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2ஏ தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் செய்தவர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, ஊழல் தடுப்புத்துறைகள் மூலம் பறிமுதல் செய்திட வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நபர்களை தப்பவிடாமல் இருக்க துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீட்டுத்தர வேண்டும்

நாகர்கோவில் அருகே உள்ள பழவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 80). இவர் நேற்று தனது மகள் மல்லிகாவுடன் (46) கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 3 மகன்களும், ஒரு மகளும் சேர்ந்து எனது சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டு, எனக்கு உணவு, தண்ணீர் தரவில்லை. என்னை 4 பேரும் சேர்ந்து அடிக்கிறார்கள். எனது மனைவி இறந்தபோது அடக்கம் செலவு செய்ய மறுத்து விட்டனர். எனது மகள் மல்லிகாதான் அடக்க செலவுகளை செய்தார். அவளுக்கு நகையோ, பணமோ, சொத்தோ கொடுக்கவில்லை. தற்போது எனது இடத்தில் உள்ள ஒரு மரத்தடியில் படுத்து இருக்கிறேன். மழை, வெயிலிலும் மரத்தடியில்தான் படுத்து கொள்கிறேன். எனக்கு எனது மகள் மல்லிகா கடந்த 6½ ஆண்டுகளாக மருந்து, மாத்திரை, உணவு தந்து உதவுகிறார். எனது சொத்தை, 4 பிள்ளைகளும் ஏமாற்றி எழுதி வாங்கியதை மீட்டு தரும்படிகேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செல்போன் கோபுரம்

நாகர்கோவில் கிறிஸ்துநகர் ஜோதி தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதி நாகர்கோவில் மாநகரிலேயே மிகவும் நெருக்கமாக மக்கள் வாழும் பகுதியாகும். இங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வாழும் மக்களுக்கு புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் செல்போன் கோபுரத்தை அமைக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவி

பின்னர் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கல்குளம் தாலுகா வெள்ளிச்சந்தை ‘அ‘ கிராமத்தை சேர்ந்த பானுமதி கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கி இறந்தார். அவருடைய சகோதரிகளான சரஸ்வதி, லெட்சுமி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1½ லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அபுல்காசிம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக நேற்று ஏராளமானோர் வந்திருந்தனர். மனு கொடுக்க வருபவர்களில் ஒருவர் மண்எண்ணெய் கேனுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மனு கொடுக்க வந்தவர்கள் வைத்திருந்த பைகள், பேக்குகளை போலீசார் சோதனை செய்தபிறகே, கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்