வார்தாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை சிகிச்சை பலனின்றி சாவு பொதுமக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி

வார்தாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை 7 நாள் போராட்டத்துக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்.

Update: 2020-02-11 00:19 GMT
மும்பை,

வார்தா மாவட்டம் ஹிங்கன்காட் தரோடா பகுதியை சேர்ந்த இளம்பெண் அங்கிதா(வயது25). இவர் அங்குள்ள கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும், விகேஷ்(27) என்ற திருமணமான வாலிபரும் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விகேஷின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடனான தொடர்பை அங்கிதா துண்டித்தார். இதனால் கோபம் அடைந்த விகேஷ், கல்லூரி சென்று வரும் நேரங்களில் அங்கிதாவை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்தார். இதை அங்கிதா கண்டித்தார்.

இந்தநிலையில், கடந்த 3-ந் தேதி அங்கிதா கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த விகேஷ் தான் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் முகம், தலை, இடது கை, முதுகு, கழுத்து மற்றும் கண்ணில் தீக்காயம் அடைந்த அங்கிதா நாக்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பான புகாரின்பேரில் உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விகேசை கைது செய்தனர்.

கல்லூரி ஆசிரியை உயிரோடு எரிக்கப்பட்ட இந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தி விகேசுக்கு தண்டனை பெற்று தரப்படும் என மாநில அரசு அறிவித்தது. மேலும் அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக பிரபல வக்கீல் உஜ்வல் நிகமை நியமித்தது.

இந்தநிலையில், 40 சதவீத தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அங்கிதாவுக்கு நவிமும்பை ஐரோலியில் உள்ள தேசிய தீக்காய ஆஸ்பத்திரியில் மாநில அரசால் அனுப்பி வைக்கப்பட்ட சிறப்பு டாக்டர் சுனில் கேஸ்வானி மற்றும் நாக்பூர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், நேற்று அதிகாலை அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல் உள்உறுப்புகள் செயலிழந்தன. காலை 6.55 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

7 நாள் போராட்டத்துக்கு பின் அங்கிதாவின் உயிர் பிரிந்தது. அங்கிதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அவர் உயிரிழந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அங்கிதாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிதாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த உள்ளூர்வாசிகள் குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை வழங்கக்கோரி திடீரென ஹிங்கன்காட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அப்போது சிலர் போலீசாரை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர்.

இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். தற்போது அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
என் மகளின் சாவுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்

வார்தாவில் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை அங்கிதா நாக்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியில் அவரது தந்தை கண்ணீருடன் கூறியதாவது:-

இந்த ஏழு நாட்களில் என் மகள் அனுபவித்த வேதனையை அவளை எரித்தவரும் அனுபவிக்க வேண்டும். எனது மகளின் சாவுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். அது நிர்பயா வழக்கை போல் தாமதமாக கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்