புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய சப்பர பவனி

தென்னகத்து பதுவை என அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.

Update: 2020-02-11 22:00 GMT
ஓட்டப்பிடாரம், 

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய சப்பரபவனி நடந்தது.

ஆலய திருவிழா 

தென்னகத்து பதுவை என அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நாளான நேற்று புனித அந்தோணியார் சப்பர பவனி நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு அன்னை மரியாவின் திருச்ஜெபமாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை, தூத்துக்குடி மற்றும் மதுரை மறைமாவட்டங்களை சேர்ந்த குருக்கள் கலந்து கொண்டனர்.

சப்பரபவனி 

பின்பு புதுமைக்கிணறு வளாகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட புதுமைப் புனிதர் புனித அந்தோணியார் சொரூபம் மந்திரிக்கப்பட்டு அங்கிருந்து பவனியாக புளியம்பட்டி தெருக்களில் எடுத்து வரப்பட்டது. இதில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணி, காலை 6 மணி, 7.30 மணிக்கு திருப்பலி, 10 மணிக்கு அன்னையின் திருச்ஜெபமாலை வழிபாடு நடைபெறுகின்றன. தொடர்ந்து 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகின்றது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ், உதவி பங்குத்தந்தைகள் எட்வின் ஆரோக்கிய நாதன், சதீஷ்செல்வதயாளன் உள்ளிட்டவர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்