சென்டிரல் ரெயில் நிலையம் அருகே மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கு ; 3 மாணவர்கள் கைது

சென்டிரல் ரெயில் நிலையம் அருகே மாநகர பஸ் கண்ணாடியை அடித்து உடைத்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிய வழக்கில், மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2020-02-11 22:30 GMT
பெரம்பூர்,

சென்னை மந்தவெளியில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பஸ் ஒன்று கடந்த 4-ந் தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் பாலாஜி (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் சென்டிரல் ரெயில் நிலையம் அருகே வந்த போது, பஸ்சில் பயணம் செய்த புதுக்கல்லூரி மற்றும் மாநில கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதில், ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இதையறிந்த டிரைவர் பாலாஜி பஸ்சை உடனே நிறுத்தி மாணவர்களை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து டிரைவர் பாலாஜி பூக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் 3 பேர் கைது

அதில், கடந்த 7-ந் தேதி அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்களான 17 வயதுடைய பி.ஏ.முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் மற்றும் 2-ம் ஆண்டு பி.எஸ்சி. மாணவரான சூர்யா (வயது 19), பி.எஸ்சி. 3-ம் ஆண்டு மாணவரான இஸ்மாயில் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

இதில் 17 வயது மாணவனை சென்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற இருவரையும் போலீசார் புழல் சிறையிலும் அடைத்தனர்

மேலும் 3 பேரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மாநில கல்லூரி மாணவர்களான பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் திருவள்ளூரைச் சேர்ந்த பூபதி (18), பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காட்டை சேர்ந்த சுரேஷ் (வயது 19) மற்றும் மணிகண்டன் (வயது 19) ஆகிய மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாநகர பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில், மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரும், புதுக்கல்லூரி மாணவர்கள் 3 பேரும் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்