ராமநாதபுரம் இரட்டை கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது

ராமநாதபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கூலிப்படையை சேர்ந்தவர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2020-02-11 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி மாலை வாலாந்தரவை சூரப்புளி சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (வயது 36), கருவேப்பிலைக்காரத்தெரு தவமணி மகன் விக்கி என்ற விக்னேசுவரன் (27) ஆகியோரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பலியான கார்த்திக்கின் அண்ணன் தர்மா என்ற தர்மராஜன் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 16 பேரை தேடிவந்தனர்.

இந்த வழக்கில் போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். மீதமுள்ள 5 பேரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். குறிப்பாக கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் நெல்லை, சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் தேடிவந்தனர்.

கடந்த 15 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காமராஜர் நகரை சேர்ந்த வைரமுத்து மகன் அதிசயபாண்டியன் (48) என்பவரை நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட போலீசார் கோவில்பட்டி அருகே வைத்து கைது செய்ததாக தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அதிசயபாண்டியனை கைது செய்துள்ளனர். இவர் மீது பெருமாள்புரம், சிவந்திபட்டி, ஒட்டப்பிடாரம், குன்னூர், திண்டுக்கல் தடிக்கொம்பு, திண்டுக்கல் நகர், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் கேணிக்கரை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிடிபட்டுள்ள அதிசயபாண்டியனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிசயபாண்டியன் மீது ராமநாதபுரத்தில் வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த முக்கிய வழக்கு உள்ளதால் அதுதொடர்பாக அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தூத்துக்குடி மாவட்ட போலீசார் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்ததும், ராமநாதபுரம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்