அறந்தாங்கி அருகே பள்ளி வேன், சைக்கிள் மீது லாரி மோதல்; பால் வியாபாரி பலி 11 குழந்தைகள் காயம்

அறந்தாங்கி அருகே பள்ளி வேன் மற்றும் சைக்கிள் மீது லாரி மோதியதில் பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார். 11 குழந்தைகள் காயமடைந்தனர்.

Update: 2020-02-11 22:15 GMT
அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே சீனமங்கலத்தில் திருவள்ளுவர் நர்சரி பிரைமரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்த பின்னர், பள்ளி வேனில் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். வேனை டிரைவர், அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்(42) ஓட்டினார்.

அறந்தாங்கி- கட்டுமாவடி சாலை மெயின் ரோடு பகுதியில் சென்றபோது, அறந்தாங்கியில் இருந்து கோட்டைப்பட்டினத்திற்கு சென்ற லாரி, பள்ளி வேனின் பின்பகுதியில் மோதியது. அதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த சைக்கிள் மீதும் மோதியது. இதில் சைக்கிளை ஓட்டி வந்த சீனமங்கலத்தை சேர்ந்த பால் வியாபாரி கருப்பையா(வயது 60) படுகாய மடைந்தார்.

மேலும் லாரி மோதிய வேகத்தில், பள்ளி வேன் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ஆலமரத்தின் மீது மோதியது. இதில் வேனில் இருந்த சீனமங்கலம் பகுதியை சேர்ந்த குணால், முகேஷ்வரன், மோகேஸ்வரன், லோகேஸ்வரன், சாதனா, சுபா, முகமதுஅஜீஸ், மதன், ரோஜனா, சஞ்சய், தாய்மகன் ஆகிய 11 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா மற்றும் காயமடைந்த பள்ளி குழந்தைகளை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் கருப்பையா மற்றும் பள்ளி குழந்தைகள் குணால், முகேஷ்வரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் குணால், முகேஷ்வரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், நாகுடி சப்- இன்ஸ்பெக்டர் நவீன்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆனந்தை(42) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்