கடலூரில், கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு - ஆட்டை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

கடலூரில் ஆட்டை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-02-11 22:52 GMT
கடலூர், 

கடலூர் பாதிரிக்குப்பம் காமன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 55). தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு ஆடு, அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த கருணாமூர்த்தி அந்த ஆட்டை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்து விட்டார். ஆனால் நீச்சல் தெரியாத அவர் சிறிது நேரம் தண்ணீரில் தத்தளித்தார். ஆனால் அவரால் ஆட்டை காப்பாற்ற முடியவில்லை.

சிறிது நேரத்தில் அவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறந்து கிடந்த கருணாமூர்த்தியின் உடலை வெளியே கொண்டு வந்தனர். மேலும் செத்து கிடந்த ஆட்டையும் கயிறு கட்டி வெளியே எடுத்தனர். பின்னர் இது பற்றி கருணாமூர்த்தி மனைவி புஷ்பா திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்