ஆண் குழந்தை பெற்றெடுத்த 13 வயது சிறுமி தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

13 வயது சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். இது தொடர்பாக தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

Update: 2020-02-11 23:01 GMT
பாகூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெரசாபுரம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 45). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கரும்பு வெட்டும் வேலைக்கு ஆட்களை அழைத்துச் சென்றார்.

அப்போது ஒரு பெண்ணின் 13 வயது மகளிடம் ஆசைவார்த்தை கூறி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதையடுத்து அந்த சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானாள்.

இதனையடுத்து சிறுமிக்கு கடந்த மாதம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின் குழந்தையுடன் சிறுமியை புதுவை மாநிலத்தில் உள்ள கிராமத்திற்கு அவளது தாயார் அழைத்து வந்தார்.

அப்போது தான் 13 வயதே ஆன சிறுமி குழந்தைபெற்றெடுத்தது பற்றிய விவரம் அந்த பகுதி சமூக ஆர்வலர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் குழந்தைகள் நல வாரியத்திற்கு புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் குழந்தைகள் நலவாரிய தலைவர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் குழந்தை பெற்றெடுத்தது குறித்து சிறுமி மற்றும் அவளது தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமி கர்ப்பமானதற்கு தொழிலாளி தெய்வசிகாமணி தான் காரணம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட போலீசுக்கு புதுவை குழந்தைகள் நலவாரியம் பரிந்துரை செய்தது.

இதையடுத்து தெய்வசிகாமணி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்