கந்துவட்டி கொடுமையால் தச்சுதொழிலாளி தற்கொலை: பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காமல் உறவினர்கள் போராட்டம்

கந்துவட்டி கொடுமையால் தச்சுதொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டிய 2 பேரை கைது செய்ய வலியுறுத்தி பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காமல் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-02-12 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பெரியகோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாடிமுத்து(வயது50). தச்சுதொழிலாளி. இவர் கடந்த 1-ந்தேதி வி‌‌ஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் நாடிமுத்து இறந்தார். இது குறித்து நாடிமுத்து மனைவி விஜயா, வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், எனது கணவர், தோப்பநாயகம் கிராமம் மற்றும் சென்னியவிடுதி கிராமத்தை சேர்ந்த 2 பேரிடம் குடும்ப செலவுக்காக ரூ.50 ஆயிரம் வாங்கினார். இதற்காக வீடு மற்றும் வீட்டு மனையை அவர்கள் பெயரில் எழுதி கொடுத்துள்ளார். அதற்கு வட்டியாக இதுவரை ரூ.65 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி 2 பேரும் எங்கள் வீட்டிற்கு இன்னும் ரூ.50 ஆயிரம் அசலும், ரூ.5½ லட்சம் வட்டியும் தர வேண்டும் எனவும், இல்லையென்றால் வீட்டை காலி செய்ய வேண்டும் எனவும் மிரட்டினர்.

பணத்தை வட்டியுடன் கொடுத்துவிட்டோம் என கூறியதற்கு ஒரு நாளைக்கு ரூ.500 வட்டி தர வேண்டும் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி, என் கணவரை செருப்பால் அடித்ததுடன் நீயும், உன் குடும்பமும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என மிரட்டினர். கந்துவட்டி கொடுமையால் எனது கணவர் வி‌‌ஷம் குடித்து இறந்துவிட்டார்.

எனவே கந்துவட்டி கொடுமை செய்த 2 பேர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களிடம் உள்ள வீடு, மனையை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாடிமுத்துவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் கந்துவட்டி கொடுமை செய்த 2 பேரையும் கைது செய்தால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்து கையெழுத்து போடுவோம் என கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனே கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

நாடிமுத்துவின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை செய்து நாடிமுத்துவின் உடலை வாங்கி சென்று இறுதி சடங்குகளை செய்யுங்கள். 2 பேரையும் கைது செய்வதாக போலீசார் கூறினர். ஆனால் தற்கொலைக்கு தூண்டிய 2 பேரையும் கைது செய்யும் வரை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கமாட்டோம் என நாடிமுத்துவின் உறவினர்கள் உறுதியாக தெரிவித்துவிட்டனர். பின்னர் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

இதனால் பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் போலீசார் தவித்து கொண்டு இருக்கின்றனர். இது குறித்து நாடிமுத்துவின் உறவினர்கள் கூறும்போது, 2 பேரையும் கைது செய்யும் வரை பிரேத பரிசோதனை செய்ய பிரேத கிடங்கில் இருந்து நாடிமுத்துவின் உடலை எடுக்கக்கூடாது என கூறிவிட்டு ஊருக்கு வந்துவிட்டோம். அதன்பிறகு எங்களிடம் போலீசார் எதுவும் பேசவில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் தான் பிரேத பரிசோதனைக்கு அனுமதித்து உடலை வாங்குவோம் என்றனர்.

மேலும் செய்திகள்