பயிர்க்கடன் வட்டி மானியம் ரத்து: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்

பயிர்க்கடன் வட்டி மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி விவசாயிகள் காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்.

Update: 2020-02-12 22:45 GMT
கும்பகோணம்,

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக உயர்த்தி, திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். 58 வயதை கடந்த விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பயிர்க்கடன், பயிர் நகை கடன் ஆகியவற்றுக்கான வட்டி மானியம் 4 சதவீதத்தை ரத்து செய்து, வட்டியை 9.25 சதவீதமாக உயர்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சின்னதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விமல்நாதன், சாமிநாதன், புவனேஸ்வரி, சண்முகம், சங்கர், வரதராஜன், மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக விவசாயிகள் மண்வெட்டிகள், அன்னக்கூடையுடன் வந்து கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்