வரதட்சணை கேட்டு கொடுமை: மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

வரதட்சணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-02-12 22:45 GMT
தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 33). முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மனைவி பாண்டீஸ்வரி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குமார் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். தனக்கு சொந்தமாக சலூன் கடை வைப்பதற்கு வரதட்சணை வாங்கி வருமாறு மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி பாண்டீஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவருடன், குமாரும் சென்றார். அங்கு குமார் தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்தார்.

அப்போது அங்குள்ள ஒரு அறைக்குள் மனைவியை அழைத்துச் சென்று பூட்டினார். பின்னர் பாண்டீஸ்வரி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வரதட்சணை கொடுமை, ஆபாசமாக பேசுதல், கொலை செய்தல் ஆகிய 3 பிரிவுகளில் மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

குமார் தனது மனைவியை ஆபாசமாக பேசியதற்கு 3 மாதம் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், வரதட்சணை கொடுமை செய்ததற்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து குமாரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்