சீனியப்பா கடற்கரை பகுதியில் தொழில் செய்ய இடையூறு - கலெக்டரிடம் மீனவர்கள் புகார்

சீனியப்பா கடற்கரை பகுதியில் காலம் காலமாக தொழில் செய்து வந்த கடற்கரை நிலத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை நீக்கி தரக்கோரி கலெக்டரிடம் மீனவர்கள் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2020-02-12 22:30 GMT
ராமநாதபுரம், 

சுந்தரமுடையான் அருகே உள்ள சீனியப்பா தர்கா பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சுந்தரமுடையான் கடற்கரை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம். இந்த பகுதி மீனவர்கள் வல்லம் எனும் நாட்டுப்படகில் காலம் காலமாக மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். இதுதவிர, மேலும் சிலர் வெளியூர் பகுதியிலிருந்தும் இந்த பகுதிக்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.

மீனவ பெண்கள் கடல் பகுதியில் பாசி சேகரித்து சுயதொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் கடற்கரை பகுதியில் வல்லம் நாட்டுப்படகினை நிறுத்தி மீன்களை சேகரிப்பதும், வலைகளை உலர்த்துவதும் வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியை தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான நிலம் என்று கூறி மீன்பிடி படகினை நிறுத்தவும், தொழில் செய்யவும், வலைகளை உலர்த்தவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சீனியப்பா தர்கா பகுதி கடல் ஓரத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.1.30 லட்சம் மதிப்பில் சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது அந்த இடத்தில் தான் தனியார் தனக்கு பட்டா இருப்பதாக தெரிவித்துள்ளார். காலம் காலமாக தொழில் செய்துவரும் மீனவர்களாகிய எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு பட்டா வழங்கப்பட்டிருந்தால், எங்களின் வாழ்வாதாரம் கருதி அதனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு செய்து ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்